01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Tuesday, February 18, 2014

மூடிட்டு போங்க பாஸ் - ராஜீவ்காந்தி வழக்கில் தண்டனையை குறைத்தது தவறா!!?

தப்பினார்கள் அப்பாவித் தமிழர்கள்



சாந்தன், பேரறிவாளன்,முருகன் இவர்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் என்று உளரும் அத்தனை முட்டாள்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்பவுது ஒன்றே ஒன்று தான்...


" மூடிட்டு போங்க பாஸ் "

நாலு நியாயத்தை பேச வந்தாக்க,  என்னய்யா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட, அப்படின்னு கடுப்பாகும் அன்பு நடுசெண்டர் வாதிகளும், உண்மை  அறியா இளைய சமூகமும் தொடர்ந்து படிக்கவும்..

1944இல் பிறந்த ராஜீவ் காந்தி, இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டு அவரின் அரசியல் வாரிசு சஞ்சய்காந்தியும் விமான விபத்தில் இறந்த பின்பு தனது 40வது வயதில் இந்திய பிரதமராக 1984இல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியாவை வல்லரசாக்கவேண்டும் என்ற ராஜீவ் காந்தியின் கனவு பல சர்வதேச சக்திகளுக்கு எரிச்சலூட்டியது. இலங்கையிலும் மாலத்தீவிலும் ராஜீவ்காந்தியின் ராணுவத் தலையீடு எதிர்காலத்தின் இந்தியா  அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செய்வதற்கான ஒரு முகாந்திரமாகவே பார்க்கப்பட்டது.  இது வல்லரசு நாடுகளை அஞ்ச செய்தது. இப்படியே இந்தியாவை வளரவிட்டால் அது பின்னால் நமக்கு இடையூறை தரும் என்று நினைத்த வல்லரசு நாடுகள், ராஜீவ் காந்தியை மெல்ல குறிவைத்தது. யாசர் அராபத் போன்ற சில உலக தலைவர்களும் வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற சில தமிழக காங்கிரஸ் தலைவர்களும் 1991இல் நடந்த இந்த ஸ்ரீபெரும்பதூர் மாநாட்டை தவிர்க்க கூறியிருந்தும், அந்த கூட்டத்திற்கு கட்சியிலிருக்கும் நரிகளின் நயவஞ்சகத்தால் ராஜீவ்காந்தி எப்படியோ அனுப்பப்பட்டிருக்கிறார். பின்பு விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் கொல்லப்பட்டார்.

ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்டது விடுதலைப்புலிகளே என்றாலும் அவர்கள் இதை இலங்கையில் இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகளுக்கு பழிவாங்குவதற்காக செய்யவில்லை. மாறாக இந்தியாவின் பிரதமராக ராஜீவ்காந்தி மீண்டும் வருவதை விரும்பாத சர்வதேச சக்திகளுக்காகவே புலிகள் இதில் ஈடுபட்டனர். அப்போதைய இலங்கை பிரதமர் பிரேமதாஸா ராஜீவ்காந்தியின் அமைதிப்படை தலையீட்டை கடுமையாக எதிர்த்தார். அவர் பிரதமராக இருந்தபோது பிற தமிழ் குழுக்களை ஒழித்துக் கட்டுவதில் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார். அப்போதைய இலங்கை அரசு புலிகளுக்கு ஏராளமான் ஆயுதங்களை வழங்கியது. இதன் ஒரு தொடர்ச்சியாக ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு புலிகளை கையாளாக பிரேமதாஸா பயன்படுத்தியிருக்க ஏராளமான சாத்தியம் இருக்கிறது.

 ராஜீவ் காந்தியை கொலை செய்தால் தமிழ் நாட்டிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் எல்லா உதவிகளும் அடைக்கபட்டுவிடும் என்பதை புலிகள் நன்கு அறிவார்கள். இருந்தும் ஏன் அவர்கள் இதைச் செய்தார்கள்?  இந்திய அமைதிப்படையின் தலையீட்டிற்குப் பிறகு விடுதலைப் புலிகள் முற்றிலுமாக பலவீனமடைந்துவிட்டனர். ஆனால் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு பெரும் ராணுவ பலம் கொண்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் திடீர் வளர்ச்சி பெறுகின்றனர். இந்திய கடல் வழி அவர்களுக்கு மறுக்கபட்ட நிலையில் தமிழகத்திலிருந்து உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் இது எப்படி சாத்தியமாயிற்று? ராஜீவ் காந்தி கொலைக்கு பரிசாக புலிகளுக்கு ஏராளமான ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அவர்களது ஆயுதக் கப்பல்கள் எந்த தடையும் இன்றி இலங்கை கடல்பரப்புக்குள் அனுமதிக்கப்பட்டன.ஒரு பிரமாண்டமான ராணுவமாக குறுகிய காலத்தில் புலிகள் திடீர் வளர்ச்சி பெறுகின்றனர். கண்டிப்பாக வல்லரசு நாடுகளின் நட்பு இல்லாமல் அது சாத்தியமில்லை.

இந்த வழக்கு இந்திய புலனாய்வுத் துறையினால் மிக மோசமாக புலனாய்வு செய்யப்பட்டு அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. முக்கியமான சாட்சிகள் தப்பவிடப்பட்டனர். தற்கொலை செய்ய அனுமதிக்கபட்டனர். ஜெயின் கமிஷன் முன் பதிவு செய்யப்பட்ட முக்கியமான சாட்சியங்கள் எதுவும் தீவிரமாக விசாரிக்கப்படவில்லை. இந்திய உளவுதுறையால் மறிக்கப்பட்ட புலிகளின் ரகசியத் தகவல்கள் சதி பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தும் அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஜெயின் கமிஷனின் செயல்பாடு அவசரமாக முடக்கப்பட்டது. இந்தப் படுகொலையின் சர்வதேச அரசியல் முக்கியத்துவம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாஸர் அரபாத் ராஜீவ் உயிருக்கு ஆபத்து என பல முறை எச்சரித்தது ஏன் பொருட்படுத்தபடவில்லை என்கிற கேள்விக்கு இன்றும் கூட முறையான பதில் இல்லை. அதை போன்று இந்த கொலைவழக்கின் எதிர்தரப்பு வழக்கறிஞர் துரைசாமியின் பல கேள்விகளுக்கு பதிலில்லை
[அவற்றை மேலும் அறிய இங்கே ராஜீவ் காந்தி கொலை வழக்கின் வெளிவரா சில உண்மைகள்  கிளிக் செய்து படிங்க]

இதையெல்லாம் ஏன் இந்த தம்பி இப்போ மூச்சிரைக்க சொல்லிட்டு இருக்கு'ன்னு தானே நினைக்கிறிங்க. சரி விடயத்திற்கு வர்றேன். ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்தில் தவறிழைத்தவர்கள், அதன்மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, அந்த சம்பவத்துடன் நேரடியான மற்றும் மறைமுகமான தொடர்புகள் எதுவும் இல்லாமல், கைது செய்யப்பட்ட 30 தமிழர்களுக்கும் உடனே தூக்கு தண்டனை தர சொல்லி அன்றைய வழக்கில் கொடூரமாக தீர்ப்பெழுதினர். மனிதநேய ஆர்வலர்கள், சட்ட வல்லுனர்கள் தலையீட்டின் பேரில் அந்த எண்ணிக்கை 26ஆக குறைந்து பின்பு இறுதியில் 4ஆக மாறி நளினிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு 3 பேராக மாறியது.அது தான் சாந்தன்,பேரறிவாளன் மற்றும் முருகன்.

இவர்களுக்கு எதிராக தூக்கு/ஆயுள் தண்டனை கொடுக்குமளவிற்கு வலுவான எந்த ஆதாரமும் இல்லை. அதிகார தலைமைகளை மகிழ்ச்சிவூட்டவே ஒரு ஃபார்மாலிட்டி நடவடிக்கையாகவே இவர்களுக்கான தூக்கு/ஆயுள் தண்டனை என்று உண்மை அறிந்த வழக்கறிஞர்கள் பலரும் கூறியுள்ளது. பல ஊடகங்களில் பதிவான விடயம். இத்தனை ஆண்டு நரக வேதனைக்கு பிறகு இந்த மூன்று அப்பாவிகளுக்கும் இன்று[18/02/2014]  போதிய ஆதாரமில்லாததை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு அந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக உத்தரவிட்டது. தப்பே செய்யாமல் ஒருத்தனை சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல் தூக்கு தண்டனையையும் பெற்று நடைபிணமாய் தூக்குமேடைக்கு அருகில் 20 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பேரறிவாளன் பேசிய வார்த்தைகள், கீழே
--------------------------------------------------------------------------------------------------
" இதோ 19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்? மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்...

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது. இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கொள்ள முடியும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்??

உங்களில் ஒருவன் தானே நானும்?? தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். " செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?"
---------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் தோழர்களே, இளைய தமிழ் சமூகமே, நடுநிலை வாதிகளே, இப்போ சொல்லுங்க மேற்சொன்ன மூவரும் முறையான ஆதாரமுள்ள குற்றவாளிகளா?! இல்லவே இல்லையென்று நிரூபிக்க இன்னும் கூட என்னால் நூறு ஆதாரங்களை அடுக்க முடியும். தயைகூர்ந்து இனியாவது அதிகார வர்க்கமோ, பத்திரிக்கைகளோ, வேறு சிலரோ சொல்வதை உடனடியாக நம்பிவிடாதீர்கள். உலகில் நாம் அறியாத நிறைய விடயங்கள் உள்ளது. எதையும் தீர ஆய்ந்து பின்பு உண்மையை உணர்ந்து, அதன் பின்பு அதை வெளிப்படுத்துங்கள். "இனி எங்கும் தெளிவான தமிழனம் வேண்டும்"

- ஆருத்ரன்^

கட்டுரைக்காக படித்தவைகள்:
 Beyond The Tigers - Rajiv Sharma " தமிழாக்கம்: ஆனந்தராஜ் "
http://rajivgandhi-assassination.blogspot.com/2010/10/blog-post_01.html
http://nerudal.com/nerudal.15620.html
http://en.wikipedia.org/wiki/Assassination_of_Rajiv_Gandhi
http://en.wikipedia.org/wiki/Rajiv_Gandhi
http://arasiyalla.blogspot.com/2014/02/blog-post.html
http://www.maalaimalar.com/2013/02/19124631/rajiv-gandhi-murder-7.html

1 comment:

  1. மிகச் சரியான பதிவு அண்ணா..

    ReplyDelete