01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Wednesday, April 16, 2014

ணா....அரசியல் ஒரு வட்டம்'ங்ண்ணா

ணா....அரசியல் ஒரு வட்டம்'ங்ண்ணா
======================================

அரசியல் கூட்டு சிக்கல்களில் ஒருத்தரையும் விடாமல் எல்லாரையும் ஒரு மனுஷன் போய் பார்க்கிறார் என்றால், #பதவி_ஆசை எந்த அளவிற்கு இருக்குமென்று யூகிக்கவே முடியவில்லை. கலைஞர் விழாவில் அஜித் பேசியது போல "சினிமா இண்டஸ்ட்ரி வேற அரசியல் வேற"ன்னு பேச குறைந்தபட்சம் பதவி ஆசை இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதில் எந்த பாகுபாடும் இல்லாமல் ஆவலோடு எல்லா திசைகளிலும் கல்லெறிந்து வருகிறார் விஜய். அவர் தந்தையின் தவறான வழிகாட்டுதலாகவே இதை கொள்ளவேண்டியுள்ளது. ரஜினி/கமல் அளவிற்கு முழு வளர்ச்சி எட்டாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் முன்னேற்றம் தராது.

முன்னரே இதை எல்லாம் குறிப்பால் உணர்ந்து கொண்ட திமுக & சன்குழுமம் கடுப்பாகி, காவலன் திரைப்படத்தை எங்கும் திரையிட முடியாத அளவிற்கு டிஸ்டிபுயூட்டர்கள் வாயிலாக இடையூறு செய்தது. அதில் கடும் பீதியடைந்த விஜய் தரப்பு, சடாலென அதிமுக'விடம் கையேந்தியது. அவர்கள் செய்த பெரிய தவறு அது தான், அதன் பின் ஓரளவிற்கு நிலைமை சில ஆண்டுகள் மட்டும் சீராக இருந்தது. முழுதாக நிலைமை மாறவில்லை. பூதம் மீண்டும் "தலைவா" படத்திற்கு கிளம்பியது.  எந்த பிரச்சனையால் திமுக கடுப்பானதோ அதே பிரச்சனையில் அதிமுக வேறு மாதிரி கடுப்பானது. ஆளுங்கட்சியினர் தலைவா படத்தை தடை செய்ய தீவிரமாக இருந்ததற்கு வெறுமென ஜெயாடிவி உரிமம் மட்டுமல்ல, விஜயின் அரசியல் அதிக பிரசங்கி தனமும் தான். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்ல நாங்கள் அணிலாக இருந்தோம் என்று அறிவித்தது மட்டுமல்லாமல், அதீத அரசியல் ஆசைகளோடு நாகப்பட்டினத்தில் கூட்டப்பட்ட விஜய் நற்பணி மன்றம் கூட்டமும் அதிமுக தரப்பை கோபமடைய வைத்தது.  அந்த கோபம், விஜய் அரசியலுக்கு வந்து விடக்கூடாது என்ற நேரடி உள்நோக்கத்தையும் கொண்டிருந்தது.

இப்படியான சூழ்நிலையில் விஜய் தவறான வழிகாட்டுதலின் பெயரில் வேட்டைக்காரன் படம் வந்த போது காங்கிரஸ் தலைமையை சென்று சந்தித்தார். இப்போது அந்த வரிசையில் மோடியை சென்று சந்தித்துள்ளார். இது நிலையான எந்த பலனையும் தராது. என்பதனை விஜய்க்கு தவறான வழியை காட்டும்  ஆட்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில் நட்டம் அவரின் தொடர் வளர்ச்சிக்கு தான். ஒரளவிற்கு கருத்தாக்க அரசியல் அறிவு கொண்ட சீமான் போன்ற சினிமா துறையினரை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம். தயைகூர்ந்து தமிழக அரசியலில் இனியொரு விஜயகாந்தை உருவாக்காதீர்கள்.

#ஆருத்ரன்^